முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை: புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது: கவர்னர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா: கடிதம் கொடுத்தார் முதல்வர் நாராயணசாமி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நேற்று கவிழ்ந்தது. இதையடுத்து துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் அவசரமாக சபையை விட்டு வெளியேறினார் நாராயணசாமி.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நேற்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார்.

அப்போது முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை ஆற்றினர்.

கொரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு 41 சதவீதம் நிதி தருகிறது. ஆனால் புதுச்சேரி பிரதேசத்துக்கு 20 சதவீதம் நிதி தான் கிடைத்தது. என்று காட்டமாகப் பேசியவர், எப்பதவியும் நிரந்தரம் இல்லை. சிவலோக பதவி மட்டுமே நிரந்தரம் என்றார் கிண்டலாக.

பாரதீய ஜனதா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாகவும் விமர்சித்தார்.

இதற்கிடையில் கொறடா அனந்தராமன் எழுந்து, நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உண்டா? என்று கேள்வி எழுப்பினார். அந்நேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ‘நியமன உறுப்பினர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். இதையடுத்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் (9 பேர்) வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் தனது அறையில் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்குப் பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார்.

ராஜினாமா கடிதத்தை அளித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். ஆட்சிக் கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று காட்டமாகக் கூறினார்.

புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார். ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினோம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து