100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இஷாந்த் சர்மா

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      விளையாட்டு
Ishant-Sharma-2021-02-23

Source: provided

மும்பை : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. 32 வயதான இவர் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். 302 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 74 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். 

இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி இஷாந்த் சர்மாவுக்கு 100-வது போட்டி ஆகும். அதுவும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் அவர் தனது 100-வது டெஸ்டில் விளையாடுகிறார். 

இந்த மைல் கல்லை எட்டும் 11-வது இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆவார். பந்து வீச்சாளர்களில் 4-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது வீரராக இடம் பிடிக்கிறார். கபில் தேவ்-க்குப்பிறகு 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் இவர்தான் 

காயத்தால் அணியில் இருந்து வெளியேற்றம், சிறப்பாக பந்து வீசவில்லை என அணியில் இருந்து வெளியேற்றம் ஆகிய சோதனைகளை கடந்த இந்த இமாலய சாதனைய எட்ட இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் இஷாந்த் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அரிதான செயலாக பார்க்கப்படுகிறது. 

தெண்டுல்கர் 200 டெஸ்டில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் (163 டெஸ்ட்), வி.வி.எஸ். லட்சுமணன் (134), அணில் கும்ப்ளே (132), கபில் தேவ் (131), கவாஸ்கர் (125), துலீப் வெங்சர்கார் (116), கங்குலி (113), ஹர்பஜன் சிங் (103), ஷேவாக் (103) ஆகியோர் உள்ளனர். 

100-வது டெஸ்டில் களம் காண இருக்கும் 32 வயதான இஷாந்த் ஷர்மா கூறியதாவது:- 

என்னை அதிகம் புரிந்து கொண்ட கேப்டன் யார்? என்று குறிப்பிட்டு சொல்வது கடினமானதாகும். எனக்கு கேப்டனாக இருந்த எல்லோருமே என்னை நன்கு புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். கேப்டன் நம்மை புரிந்து கொள்வதை விட கேப்டன் என்ன நினைக்கிறார், நம்மிடம் இருந்து எத்தகைய செயல்பாட்டை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து செயல்பட வேண்டியது எப்பொழுதும் மிகவும் முக்கியமானதாகும். 

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது 100 டெஸ்ட் போட்டி இலக்கை விரைவாக எட்ட உதவியதா? என்று கேட்கிறீர்கள். இதனை நான் கெட்டதிலும் நல்லது என்றுதான் பார்க்கிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் நான் விளையாட விரும்பவில்லை என்று சொல்லமாட்டேன்.

எந்த வகையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ? அதில் சிறப்பாக செயல்பட பயிற்சி எடுப்பதுதான் விளையாட்டு வீரரின் பணியாகும். குறுகிய வடிவிலான போட்டியில் ஆடாததை நினைத்து எனது டெஸ்ட் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பமாட்டேன். ஒரு வடிவிலான போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். 

மற்ற விஷயங்கள் குறித்து அதிகம் சிந்திக்காமல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தியது 100-வது டெஸ்டை எட்ட உதவி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடி இருந்தால் 100-வது டெஸ்ட் இலக்கை எட்டி இருக்க முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் இந்த இலக்கை எட்ட அதிக காலம் பிடித்து இருக்கலாம். 

131 டெஸ்டில் விளையாடி இருக்கும் கபில்தேவின் சாதனையை கடப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது குறித்து மட்டுமே சிந்திக்க நினைக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனையை காட்டிலும் அணியின் வெற்றிக்குதான் முக்கியத்துவம் அளிப்பேன். 

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றால் ஒருநாள் உலக கோப்பையை வென்றது போன்ற மகிழ்ச்சியை அடைவேன். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல் 38 வயது வரை விளையாடுவேனா? என்று சொல்ல முடியாது. ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அடுத்து என்ன வரும் என்பது யாருக்கு தெரியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து