புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      இந்தியா
central-government 2020 11 10

Source: provided

புதுடெல்லி : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுவையில் முதல்வர்  நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். 

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர்  நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது. மேலும் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து