மேற்கு வங்காளத்தில் வரும் 13-ம் தேதி ஒவைசி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பீகார் மாநில தேர்தலில் மஜ்லிஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. பல இடங்களில் இந்த கட்சி அதிகளவில் ஓட்டை பிரித்தது. இதன் காரணமாகத்தான் அங்கு லல்லு கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மேற்கு வங்காளத்திலும் மஜ்லிஸ் கட்சி தனித்து களம் இறங்குகிறது. மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று கருதி இந்த பகுதியில் அதிகளவில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 தொகுதியில் 13 தொகுதியின் வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி இறுதி செய்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அங்கு ஓவைசி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். வரும் 13-ம் தேதி முதல் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலாவதாக சாகர்திகியில் பிரசாரம் செய்யும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.