தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      தமிழகம்
Communist 2021 03 05

Source: provided

சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன்பாடு செய்து கொண்டது. அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தங்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்தார்.

இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தலைமையிலான குழுவினர் 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தனர். 

ஆனால் தி.மு.க. தரப்பில் இரட்டை எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்க முடியாது. ஒற்றை இலக்கத்தில் தான் வழங்க முடியும் என்று பேச்சுவார்த்தையை முடித்து வைத்தனர். அதாவது இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை வழங்க தி.மு.க. தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாடு கையெழுத்தானது.  அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் - முத்தரசன் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட 11 தொகுதிகளைக் கொண்ட விருப்பபட்டியலை தி.மு.க.விடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்து இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதி, ஐ.யூ.எம்.எல்., 3 தொகுதி, ம.ம.க. 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து