தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். பங்கேற்பு

EPS-OPS 2021 07 23

தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில், தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி, தமிழக மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தனர். 

அதன்படி, நேற்று ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியிலும், எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் தன் இல்லத்தின் முன்பும் தி.மு.க. அரசுக்கு எதிரான பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொன்னதைச் செய் தி.மு.க.வே, நீட் தேர்வை ரத்து செய், ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே, அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி, விண்ணை முட்டுது விலைவாசி போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதே போன்று, எடப்பாடி பழனிசாமியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  நாமக்கலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தின் முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க.வின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா தடுப்பு பணிகளில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டது என கூறினார்.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டுக்கு முன் அ.தி.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதே போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து