இன்று சென்னை வருகிறார்: புதிய கவர்னர் ஆர்.என். ரவி 18-ம் தேதி பதவியேற்கிறார் : ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா

RN-Ravi 2021 09 15

Source: provided

சென்னை : தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை வருகிறார். வரும் 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டதை அடுத்து தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.  நாகலாந்து மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ரவி, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி 2012-ல் ஓய்வு பெற்றுள்ளார். 

பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த ரவி, 2019-ம் ஆண்டு நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது இவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.  புதிய கவர்னராக பொறுப்பு ஏற்பதற்காக ஆர்.என்.ரவி இன்று (16-ம்  தேதி) இரவு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.  வருகிற சனிக்கிழமை (18-ம் தேதி) காலை 10.30 மணிக்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக கவர்னர் மாளிகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். புதிய கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

கவர்னர் பதவி ஏற்பு விழாவுக்கு கவர்னர் மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர போலீசார் இன்று இரவில் இருந்து இந்த பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.  புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி தமிழகத்தின் 15-வது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து