முக்கிய செய்திகள்

எங்கள் வீரர்களின் கடின உழைப்பால் கிடைத்த பெற்றி: டோனி பெருமிதம்

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      விளையாட்டு
Dhoni-hail-Bravo 2021 09 25

Source: provided

சார்ஜா : எங்கள் அணி வீரர்கள் தங்களின் பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு விளையாடினார்கள், அவர்களின் கடின உழைப்பு வெற்றிக்கு காரணம் என்று சி.எஸ்.கே கேப்டன் டோனி புகழாரம் சூட்டினார்.

சி.எஸ்.கே வெற்றி...

ஷார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் டி-20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடின உழைப்பு...

எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அணியில் தங்களின் பங்கு என்ன, பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். இங்குள்ள 3 மைதானங்களுமே வித்தியாசமானவை. இதில் ஷார்ஜா மைதானம் மிகவும் மெதுவான ஆடுகளம். துபாய், அபுதாபி ஆடுகளம் வேறுபட்டவை. அதற்கு ஏற்றார்போல் வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்

பனிப்பொழிவு... 

டாஸ் வென்றபோது இங்கு பனிப்பொழிவு இருந்தது. அதனால்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தோம். எப்போதெல்லாம் பனிப்பொழிவு இருக்கிறதோ அப்போது நாங்கள் 2-வது பேட்டிங் செய்யவே விரும்புவோம். ஆர்.சி.பி அணி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள், ஆனால், 9-வது ஓவருக்குப்பின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 

அபார பந்துவீச்சு...

இன்னும் நாங்கள் நெருக்கடி கொடுத்து பந்துவீசியிருக்கலாம். இதில் படிக்கல் ஒருமுனையில் பேட்டிங் செய்தபோது, ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கியமானதாக இருந்தது. பிராவோ, ஜோஷ், ஷர்துல், தீபக் சஹர் ஆகியோரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. எந்த பந்துவீச்சாளர் எந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தலாம் என்பது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

நிறுத்திவைப்பேன்...

தேநீர் இடைவேளைக்கு முன்பாக மொயின் அலியிடம், நீங்களும் விரைவாக பந்துவீச வேண்டியது இருக்கும். கோலி, படிக்கல் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தேன். ஆர்.சி.பி தொடக்கம் வலுவாக இருந்தது. ஆனால், பிராவாவோவுக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவுசெய்தேன். பிராவோவுக்கு பந்துவீச தாமதித்தால் கடினமான நேரத்துக்கும், கடைசி ஓவர்களை வீசவும் அவர் தேவை என்பதற்காகவே நிறுத்திவைப்பேன்.

 கடினமானது... 

இந்த ஆடுகளத்தில் தடுப்பு ஆட்டம் ஆடுவது கடினமானது, ஆனால், ஆர்சிபி அணி அதிகமான பவுண்டரிகளை அடித்தார்கள். இந்த ஆடுகளத்தில் வலது, இடது பேட்ஸ்மேன்கள் கூட்டணி முக்கியமானது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் பணியை உணர்ந்து விளையாடுவார்கள் என்ற நினைக்கிறேன். அதனால்தான் வலது, இடது பேட்டிங் வரிசையில் வீரர்களை களமிறக்கினோம். இவ்வாறு டோனி தெரிவித்தார்.

கோலி பேட்டி...

தோல்வி குறித்து ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி தெரிவிக்கையில்., போட்டி நிறைவடைந்த பிறகு எங்களால் 175 ரன்களைக் குவித்திருக்க முடியும், அப்படி ஒரு இலக்கை வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து