முக்கிய செய்திகள்

புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Ma Subramanian 2021 07 13

Source: provided

சென்னை : 100 சதவிகிதம் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கு காவல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து நடத்தும் எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சிபட்டறை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்தி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 1952-ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது, புற்றநோய் வராமல் தடுப்பதற்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதனால் புற்றுநோய் வருகிறது? புற்றுநோயை வராமல் தடுப்பது எப்படி? எத்தனை வகையான புற்றுநோய் இருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வாகனம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், தமிழகத்தின் 98 இடங்களுக்கு மாநகராட்சி, நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். 

இந்த வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும்போது இதை பாதுகாப்பது, வாகன நிறுத்தம் போன்றவற்றுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவத்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மூலம் கடிதம் அனுப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தமிழகத்தில் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

தமிழக முதல்வரும், அவருடைய மனைவியும் உடலுறுப்பு தானம் செய்வதற்கு ஒரு முன்மாதிரி தம்பதியினராய் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 3,300 வாழும் உறுப்புக்கொடையாளர்களிடமிருந்து பல்வேறு உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 2,750 நோயாளிகள் குணம்பெற்றிருக்கிறார்கள். முதல்வரின் அறிவுறுத்தலின்படி 100 சதவிகிதம் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கு காவல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து