முக்கிய செய்திகள்

முல்லைப்பெரியாறில் அதிகபட்சமாக எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம் : ஓரிரு நாட்களில் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புக்குழு ஓரிரு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணி தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணையின்போது, மனுதாரர் ஜோ ஜோசப்பின் வக்கீல் வில்ஸ் மேத்யூ ஆஜரானார். கேரளத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் 50 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அணையில் எவ்வளவு நீரை தேக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பு குழுவிடம் கேட்டு தெரிவிக்கப்படும் என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், மனுதாரர்களின் கவலையை புரிந்து கொண்டு, இந்த விவகாரத்தில் கண்காணிப்புக் குழு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.பிரகாஷ், மாநிலத்தில் நிலவும் பருவ மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவை போல, முல்லைப்பெரியாறு அணையில் நீரை 139 அடி வரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு இந்த முறையும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி. கிருஷ்ணமூர்த்தி, இன்று (நேற்று) காலை 9 மணி நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 137.2 அடியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என வாதிட்டார். அப்போது கேரள அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை தற்போதுள்ள நீரின் அளவை தொடர்ந்து இருக்கச் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி, அணைக்கான நீர்வரத்தை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாகவுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, இடுக்கி மாவட்டத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்வது குறைந்த அளவே சாத்தியமாக உள்ளது. அணையில் நீரை திறந்துவிடுவது குறித்து கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கூறியதாவது., இந்த விவகாரத்தை கோர்ட்டில் விவாதிப்பதை விட, இதில் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக ஆக்கப்பூர்வமாக கலந்து ஆலோசிக்க வேண்டும். அனைத்தையும் விவாதிக்க கோர்ட்டு அரசியல் மேடையல்ல. இது மக்களின் உயிர்கள் தொடர்புடைய விவகாரம். தற்போது நிலவும் பருவமழையை கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்கி வைக்கலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு குழுவிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஓரிரு நாட்களில் கண்காணிப்பு குழு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து