முக்கிய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவர்கள் இன்று முதல் 3 நாட்கள் மனுக்களை பெறலாம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் தொண்டர்கள், வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோருவோர் மட்டும், தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் கட்டணத் தொகை விவரம்:

1) மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் ரூ.5,000.

2) நகர மன்ற வார்டு உறுப்பினர் ரூ.2,500.

3) பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,500.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, தொண்டர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து