முக்கிய செய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் பயன் பெறும் வகையில் தமிழகத்திற்கு சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து நேரடி விமான சேவை வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
Stalin 2021 10 25

Source: provided

சென்னை :  தமிழ்நாட்டுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.,

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள தமிழர்கள், கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகள் நேரடி விமானச் சேவை இல்லாததால் அவர்கள் மீண்டும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டி உள்ளது. இது கடும் சிரமத்தையும், நிதி சுமையையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து