முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் 451 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்ய அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      ஆன்மிகம்
koodal-alagar-temple-2021-1

தமிழகம் முழுவதும் உள்ள 451 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருக்கோயில்களின் மேம்பாடுத்துவது குறித்து மாதம்தோறும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் கலைஞர் தல மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடப்பட்டு வருகின்றன. அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது போன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவிப்புகளும் சிறப்பாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு  வருகின்றது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ள வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திருக்கோயில்களான சென்னை வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.

மதுரை மாவட்டம் அருள்மிகு கூடழலகர் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு குன்னவாக்கம் அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில், கோவை மாவட்டம் கோட்டை அருள்மிகு கங்கமேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை, சீர்காழி அருள்மிகு வீர நரசிம்மப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், அருள்மிகு இரத்தின கீரீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்  கோபுராபுரம் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம் இலால்குடி  அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உட்பட 451 கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். முக்கியமாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரூ. 250 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலும், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் ரூ.125 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணி செய்யப்படவுள்ளன. இப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். 88 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் மற்றும் 32 மாவட்டங்களுக்கு மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறபட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து