முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் 5 பேர் உயிரிழப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு அரியலூர் (1), திண்டுக்கல் (1), சிவகங்கை (1), திருவண்ணாமலை (2) ஆகிய மாவட்டங்களில் 5 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழிலகம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 

தமிழகத்தில்  25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,  37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 39.34 மி.மீ. ஆகும்.  மாநிலம் முழுவதும் 3 இடங்களில் அதி கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 87 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.  வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 26.11.2021 வரை 580.84 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 341.33 மி.மீட்டரை விட 70 சதவீதம் கூடுதல் ஆகும். 

தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு குழுவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ளன.  தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம்  ஏரி மற்றும் கடம்பா ஏரி ஆகியவற்றின் உபரி நீர் வெளியேறியதால், அப்பகுதியின் அருகே உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதோடு, குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மாவட்ட நிருவாகம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் இணைந்து வெள்ள நீரை வெளியேற்ற விரைந்து பணியாற்றி வருகின்றனர்.

மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகயில் மழை நீரை வெளியேற்ற 187 அதிக திறன் கொண்ட பம்புகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மின் பகிர்மான அறையில் சூழ்ந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு தொடர்ந்து மின்சார வசதி கிடைப்பதை உறுதி செய்ய இரண்டு உயர் அழுத்த ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.  

பெரம்பலூர் மாவட்டத்தில், பச்சமலையில் பெய்த கனமழையின் காரணமாக, லாடபுரம் ஏரியின் உபரி நீரால் லாடபுரம் கிராமம் மதுரா சரவணபுரம் பகுதியில் சிறு பாலம் மூழ்கியதோடு, 8 வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்தது.  எனவே இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக, விஜயபுரம் அரசு பொது மருத்துவமனையில், வெள்ள நீர் புகுந்ததால், உள்நோயாளிகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.  மழை நீரை வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை. இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை, வேலூர். தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 109 முகாம்களில், 9903 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 நபர்கள் 5 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 749 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர் (1), திண்டுக்கல் (1), சிவகங்கை (1), திருவண்ணாமலை (2) மாவட்டங்களில் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.  152 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.  637 குடிசைகள் பகுதியாகவும், 44 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 681 குடிசைகளும், 120 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள 59 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. சாலைகளில் விழுந்த 5 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12444 மருத்துவ முகாம்கள் மூலம் 4,30,563 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து