முக்கிய செய்திகள்

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும்: இந்திய வானிலை ஆமையம் தகவல்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Weather-07 14

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நேற்று (நவ. 29) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக இன்று (நவ.30) உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடையவுள்ளது. குறிப்பாக, வடக்கு ஆந்திர கடலோரம்-ஒடிஸா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி (நாளை மறுநாள்) அரபிக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் டிசம்பர் 1-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் குமரி அருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், வங்கக் கடலில் அந்தமான் அருகே மற்றும் அரபிக் கடலில் என ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் உருவாகும் மழைப்பொழிவு குறித்து அடுத்தடுத்த நாள்களில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (30-ம் தேதி) உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து