முக்கிய செய்திகள்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      இந்தியா
Rain-2021 11 08

Source: provided

திருவனந்தபுரம் : அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருப்பதால் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தவிர கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆறுகள், கால்வாய்களின் அருகே மக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோல கேரள கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டு உள்ளது. அதோடு அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும், கடலும் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து