முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஏற்பாடு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்படவுள்ளது அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று அதிகம் பரவத் தொடங்கியபோது புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு 2020 மார்ச் மாதம் வரை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். அதன்பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரியில் கவர்னர் உரை, அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்தில் தான் நடத்தப்பட்டது.

இதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, கவர்னர் உரை, மானிய கோரிக்கை மீதான விவாதமும் கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் தான் நடத்தப்பட்டது.

தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் இனிமேல் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவதற்கு பதிலாக பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பேரவை மண்டபத்துக்கு பெயிண்ட் அடிப்பது, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.

இதுபற்றி அரசு அதிகாரி கூறுகையில், ‘கலைவாணர் அரங்கில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பேரவை மண்டப அமைப்பு அப்படியே இருக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோட்டையில் உள்ள சட்டசபையையும் தயார் செய்து வருகிறோம். இங்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

புதிய வைரசான ஒமைக்ரான், கொரோனா இல்லாமல் இருந்தால் அடுத்த கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது. இங்கு தான் கடந்த 1921-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டுவரை மெட்ராஸ் மாகாண பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதன்பிறகு ஒவ்வொரு ஆட்சியின் போதும் இங்குதான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது.

முதல்வராக கருணாநிதி இருந்த கால கட்டத்தில் ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் 2010-ம் ஆண்டு சட்டமன்றம் மாற்றப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது சட்டசபை கூட்டத்தை ஜெயலலிதா மீண்டும் கோட்டைக்கு மாற்றினார். அதன்பிறகு அங்குதான் சட்டசபை கூட்டம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்துக்கு சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து