முக்கிய செய்திகள்

சாலை விபத்து உயிரிழப்புகளை தடுக்க இன்னுயிர் காப்போம் என்ற புதிய மருத்துவ அவசர உதவி திட்டம் : 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Stalin 2021 10 25

Source: provided

சென்னை : தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க இன்னுயிர் காப்போம் என்ற புதிய மருத்துவ அவசர உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.  இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி மைதானத்தில் வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

இதையொட்டி விழா நடைபெறும் இடம், மேடை அமைக்கும் இடம், விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட காரணம் அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காததுதான்.  இதை தடுக்கவும், விபத்தில் சிக்குபவர்களின் சிகிச்சைக்காக உதவும் வகையிலும் இந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த உள்ளார்.  இன்னுயிர் காப்போம். நம்மை காக்கும் 48 என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது விபத்து நிகழ்ந்த உடன் அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்.

விபத்துக்கள் நேரிட்டால் பலர் கண்டும் காணாமல் போய் விடுவதும் உண்டு. ஆனால் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாதிரி காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு உடனடியாக ரூ. 5 ஆயிரம் ஊக்கப் பரிசாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 610 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 205 அரசு ஆஸ்பத்திரிகள், 405 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும்.  விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படும்.  சிகிச்சை கட்டணத்தில் ரூ. ஒரு லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.  இந்த ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் விபத்து துரித சிகிச்சைக்கான கட்டமைப்புகள் அனைத்தும் இருக்க வேண்டும். இது தொடர்பாக ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ துறையை பொறுத்தவரை இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் தமிழக அரசு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.  அந்த வகையில் தமிழகத்தில் மட்டும்தான் மக்களை தேடி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை நேரடியாக வீடுகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது. 

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற நிலை எதிர் காலத்தில் ஏற்படக்கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டம். அந்த லட்சியத்தை நிறைவேற்றவே மக்கள் நல்வாழ்வுத் துறையும் செயலாற்றுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து