முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வரும் 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் : நாசா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வரும் 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளை பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. விண்ணில் இருப்பதை அறிய தொலைநோக்கி முக்கியமானது ஆகும். தொலைநோக்கியின் உதவியுடன் முன்னாள் வானியல் ஆய்வாளர்கள் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.  வளர்ந்து வரும் காலத்தில் நவீன தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்கு முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் காற்றுமாசு, வளிமண்டல தூசுகள் காரணமாக பூமியிலிருக்கும் தொலைநோக்கிகள் மூலமாக விண்வெளி நிகழ்வுகளை துல்லியமாக பார்க்கமுடிவதில்லை. 

இதன் காரணமாக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது.  தற்போது அதன் அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த உள்ளனர். 1989-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000-களின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். இந்த விண்வெளி தொலைநோக்கி பல விதமான சோதனைகளை கடந்து தற்போது விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  வரும் 24-ம் தேதி பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி நேற்று முன்தினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொலைநோக்கி அரேன் 5 என்ற ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நாசா டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

1960-களில் நாசாவின் பல விண்வெளி செயல்பாடுகளுக்கு காரணமான முக்கிய நபரான ஜேம்ஸ் இ.வெப்பின் நினைவாக புதிய தொலைநோக்கிக்கு ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தும் பட்சத்தில், பிரபஞ்சம், நெபுலாக்கள் நட்சத்திரங்கள் உருவாக்கம் மற்றும் பூமி உருவான விதம் போன்ற பல அரிய தகவல்களை மனிதனால் அறிய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து