முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்பட்ட வகுப்பினருக்கு கிடைத்த இட ஒதுக்கீடு: அ.தி.மு.க.வின் நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின்மூலம் அ.தி.மு.க.வின் நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின்மூலம் அ.தி.மு.க.வின் நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிக அளவு இடங்களைப் பெற வழி வகுத்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் வரும் மருத்துவச் சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும், அ.தி.முக. சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்தப் பிரச்சினை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவினை அமைக்குமாறு 27.7.2020 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுதான் இன்றைய வெற்றிக்கு அடித்தளம்.

இந்த ஆணையை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்திற்கு, தொடர் வலியுறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி.

அ.தி.மு.க.வின் நீண்ட நாள் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை தி.மு.க. தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது. 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசு வேலைவாய்ப்பிலும், கல்வி நிலையங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவச் சேர்க்கையிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவும், இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யவும் அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து