முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தகவல்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

இந்திய கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்களின் சொத்துக்கள் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்வி செலவை ஈடு செய்யலாம் எனவும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது., 

கொரோனா காலத்தில் இந்தியாவில் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்ந்து 142-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏழைகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 142 கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு ரூ.53 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 98 கோடீஸ்வரர்கள் நாட்டில் உள்ள 55.5 கோடி மக்களின் சொத்துக்களுக்கு இணையாக சொத்து வைத்துள்ளனர். 

முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் தினமும் ரூ.7.41 கோடி செலவு செய்தாலும் அவர்களின் சொத்து முழுவதையும் செலவழித்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களிடம்தான் நாட்டின் 45 சதவீத சொத்துக்கள் இருக்கின்றன. 50 சதவீத மக்களிடம் வெறும் 6 சதவீதம் சொத்துக்கள் மட்டுமே உள்ளன.இந்தியாவில் கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேருக்கு வெறும் ஒரு சதவீதம் வரி மட்டும் கூடுதலாக விதித்தால், நாட்டில் கூடுதலாக 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும்.

இந்தியாவில் 98 சதவீத கோடீஸ்வர குடும்பங்களுக்கு சொத்துவரி விதித்தால், மத்திய அரசின் மிகப்பெரிய காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தேவையான நிதியை அடுத்த 7 ஆண்டுகளுக்கு வழங்க முடியும். இந்தியாவில் முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்களின் சொத்துக்கள் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்வி செலவை ஈடு செய்யலாம். 

இந்தியாவில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் சொத்துக்களை வைத்து, தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்துக்கும், மகளிர் சுய உதவிக்குழுவுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும். 98 கோடீஸ்வர்களின் ஒட்டுமொத்த சொத்து மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பைவிட 41 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் இந்த பொருளாதார சமமின்மையை சரி செய்வதற்கு ஆக்ஸ்போம் அறிக்கை கொடுத்துள்ள பரிந்துரைகளில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மாபெரும் கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரியை மீண்டும் விதித்து, அல்லது புதிய வரியை விதித்து வருவாயைப் பெருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் கல்வி, சுகாதாரம், ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதற்காக கோடீஸ்வரர்களிடம் தற்காலிகமாக ஒரு சதவீதம் மட்டும் வரி மட்டும் விதித்தால் கூட போதும். 

சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசால் போதுமான அளவு செலவு செய்ய முடியாததால்தான், நாட்டில் தனியார் மருத்துவமனைகள், கல்விநிலையங்கள் அதிகரித்துள்ளன. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்புக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவமின்மையை குறைக்க முடியும். மேலும் மேற்கூறிய துறைகளை தனியார்மயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும். வருவாயை அதிகப்படுத்தவும், வரிவிதிப்பில் முற்போக்கான முறையையும், கோடீஸ்வர்களின் சொத்துக்களை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து