முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த 3 முக்கிய நிகழ்வுகள்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பார்ல்: வேன்டர் டூசென், கேப்டன் டெம்பா புமா ஆகியோரின் சிறப்பான சதத்தால் பார்ல் நகரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டி தொடர்பான 3 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

ஷிகர் தவான்...

2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இறக்கப்பட்டார் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். 51 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி கூட்டணியில் முதல் 20 - 25 ஓவர்களுக்கு இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்தது. இலக்கை சுலபமாக எட்டிவிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிடில் ஆர்டரில் முக்கிய விக்கெட்கள் சரிந்ததால் தோல்வி கண்டது இந்தியா. எப்படியோ ஷிகர் தவான் ஃபார்முக்கு திரும்பியிருப்பது வரும் போட்டிகளில் அணிக்கு வலுசேர்க்கும் என்பது உறுதி.

கோலி சாதனை...

பல ஆண்டுகளுக்குப் பிறகு 'கேப்டன்' என்கிற அழுத்தம் இல்லாமல் பழைய விராட் கோலியாக களம் கண்டார். இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததுடன், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். வெளிநாடுகளில் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக சச்சின் 5,065 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார், தற்போது இதனை விராட் கோலி முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தோனி (4,520 ரன்கள்) மூன்றாவது இடத்திலும், ராகுல் டிராவிட் (3,998) நான்காவது இடத்திலும், சவுரவ் கங்குலி (3,468) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

வெங்கடேஷ் அறிமுகம்...

இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், ஆல் ரவுண்டராக தேர்வாகியிருந்தார். பேட்டிங் வரிசையில் 6வது இடமும் வழங்கப்பட்டது. விஜய் ஹசாரே, ஐபிஎல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய இவர், அறிமுக போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், ஃபில்டிங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர், ஏய்டன் மார்க்ரமின் ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்தார். ஆனால் ஃபீல்டிங்கில் அசத்தி நம்பிக்கையை ஏற்படுத்திய வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சரி, பேட்டிங்கில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2- வது ஒருநாள் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணிக்கு துவங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து