முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு: சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின : கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்தாலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோயிலுக்கு வெளியேயும், கோயில் வாசலிலும் பல திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

பால், பத்திரிகை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் நடைபெற்றது.

காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், ‘டாஸ்மாக்’ கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படவில்லை. மாநகர பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் இயங்கவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் இயங்கின. 

வெளியூரில் இருந்து தொலைத்தூர பஸ்கள், ரெயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகார்கள் நிபந்தனைகளுடன் இயங்க போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நேற்று முகூர்த்தநாள் என்பதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் திருமணம் நடைபெற்றது. கோயில் வாசலில் பல திருமணங்கள் நடைபெற்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து