முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணியில் 'வார்டு பங்கீடு' பேச்சுவார்த்தை : ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தி.மு.க - அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இடையே 'வார்டு பங்கீடு' குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டிய பிறகு வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பா.ம.க. வெளியேறி விட்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. இது தவிர தே.மு.தி.க, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் நேற்று மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து கேட்டறிந்ததாக தெரிகிறது. மாவட்ட வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டு பங்கீடுகளை முடித்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரான மா.சுப்பிரமணியன் நேற்று நேர்காணல் நடத்தினார். இதேபோல் பல மாவட்டங்களில் நேற்று நேர்காணல் தொடங்கி நடைபெற்றது. 

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த முறை அந்த மாதிரி சூழ்நிலைகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றள்ள கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை சில மாவட்டங்களில் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. போட்டியிட விரும்பும் வார்டுகள், வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பு பணியும் நடைபெறுகிறது.

பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளி) காலை 10.30 மணிக்கு கமலாலயத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் வார்டுகள், தகுதியான வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது. இன்று அ.தி.மு.க. மேலிட குழுவினருடன் பேசி வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.வில் மாநகராட்சிகளை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் 25 முதல் 40 பேர் வரை போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் சராசரியாக 10 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. தலைவர்கள் மத்தியில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பேசி முடிவெடுத்ததும் வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்து அ.ம.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து