முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா? அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு எதிரொலியால், காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா என் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேரு குடும்பத்தை சேராத வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு நெருக்கமான பிருத்விராஜ் சவான், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடே, ராஜ்பப்பர், மணிசங்கர் அய்யர், குரியன், குல்தீப்சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கூறும்போது அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கூட்டுத் தலைமையை பின்பற்றுவதே காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் ஒரே வழி என அவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியிடம் விளக்கி கூறினார்.

இந்த சூழ்நிலையில் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த பூபிந்தர்சிங் ஹூடாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பூபிந்தர்சிங் ஹூடா, குலாம்நபி ஆசாத் மற்றும் அனந்த்சர்மா, கபில் சிபல் ஆகியோரை சந்தித்து ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து விவாதித்தார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த சம்பவங்களுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் குறித்து ஆராய 5 மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஜிதேந்தர்சிங்கும், உத்தரகாண்ட்டில் அவுனாஷ் பண்டேகரும், கோவாவுக்கு ரஜனி பாட்டிலும், மணிப்பூருக்கு ஜெய்ராம் ரமேஷ், பஞ்சாப்புக்கு அஜய் மக்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநிலங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்யுமாறு சோனியா காந்தி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லியில் சோனியா காந்தி சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அதற்கு எம்.பி.க்கள் உள்கட்சி பிரச்சினையாலும், தலைவர்களின் ஒழுங்கீனமான செயல்களாலும் இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறினார்கள். உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனித்தனியாக சந்தித்து பேசினார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது ஏன் என்பது குறித்து அவர் எல்லோரிடமும் கேட்டறிந்தார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தோல்வி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சூழ்நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

 

இதனால் அதிருப்தி தலைவர்களையும் சந்திக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், நேற்று சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், தாங்கள் எடுத்துள்ள பரிந்துரைகள் குறித்தும் விளக்க உள்ளார். இதனால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து