முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருங்கிணைப்பாளர் உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      அரசியல்
EPS-OPS 2022 06 30

ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ. பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேற்று எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

தங்களின் 29.06.22-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது. கடந்த 23.06.22 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் 1.12.21 அன்று செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதியாகி விட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. 

மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.22 அன்று முடிவுற்ற நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கட்சியின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும் 27.06.22 அன்று கூட்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தமுள்ள 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை. 

அதே போல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கட்சியின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும் அ.தி.மு.க.வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!