முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
CM-1 2022-07-05

Source: provided

கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர்கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென விடுதி மாநில கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, மாநிலக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

கையில் பட்டங்களுடனும், மனதில் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் நம்முடைய மாணவ,  மாணவியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.   கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான் இந்த மாநிலக் கல்லூரி.  கல்வியைக் கடல் என்று சொல்வார்கள். அந்தக் கடலோரத்தில் இருக்கும் கல்லூரி, இந்த மாநிலக் கல்லூரி. 

பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி,  விளிம்புநிலை மக்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி என்கிற வகையில் சமூகநீதிக் கல்லூரியாகவும் இது அமைந்திருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 94 பேரும், செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் பயின்று வருகிறார்கள்.  இவர்களுக்காக பி.காம், பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கிறது. செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழக அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. 

இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்கான ஒரு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.  2000 பேர் அமரக்கூடிய வகையில், கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும். தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோரது தொகுதி மேம்பாட்டு நிதியை உங்களால் இயன்ற அளவு அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டும்.   300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.  

இந்தக் காலத்தில் பள்ளிகளை அதிகம் திறந்து விட்டோம். கல்லூரிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரிச் சாலைக்குள் அனைவரும் வர வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறோம். பணம் அதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால், பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. கல்விக்காகச் செலவு செய்வதைத் தாண்டி, படிக்க வந்தால் 1000 ருபாய் என்று அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கும் அரசாக நம்முடைய தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள்.  இந்த சிறப்பு கற்றோருக்கு மட்டும்தான் உண்டு, மற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள். குறிப்பாக, பெண்கள் மிகுதியாகக் கல்வி பெற வேண்டும். பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது.   கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர்கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!