முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-10

Source: provided

சென்னை : போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள். இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது.

எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின், நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி. நியமிக்கப்படுவார். 

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும். மதுவிலக்கில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். போதை பாதை அழிவு பாதை, அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என வலியுறுத்துங்கள். 

பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க போலீசார் உறுதியேற்க வேண்டும் என்றும் சோதனை சாவடிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பதை தடுக்க வேண்டும்.

போதைப் பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும். காவல்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து போதை பாதையை அடைக்க வேண்டும். சமுதாயத்திற்கே சீரழிக்க கூடிய போதை பொருள் நடமாட்டத்திற்கு எந்தவிதத்திலும் துணை போக கூடாது. குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். இதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. 

போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ம் தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம். 

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (11-ம் தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் திரையிடப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைய சமுதாயத்தினரிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  மேலும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் கருத்துக்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து