முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2022      விளையாட்டு
UP-Kabadi 2022--09-20

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், செப்.16-ம் தேதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபடி போட்டியின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கழிப்பறையின் வாசல் ஒன்றில் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கேமரா அந்தக் கழிப்பறையையும், அங்கிருக்கும் சிறுநீர் கோப்பைகளையும் காட்டுகின்றது. 

கூடவே, கழிப்பறையின் தரையில் ஒரு தாளின் மீது திறந்தநிலையில் பூரி வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்படுகின்றது. வீராங்கனைகள் அவற்றில் இருந்து தேவையான உணவுகளை தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டாவது வீடியோ ஒன்றில், தொழிலாளர்கள் வெளியே நீச்சல் குளத்தின் அருகில் சமையல் செய்த இடத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்து வருவது காட்டப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, ஆளும் பாஜக அரசு கபடி வீராங்கனைகளை அவமானப்படுத்திவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

டி-20 தரவரிசையில் மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

டெர்பியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் மந்தனா. இதையடுத்து முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில் இருந்த மந்தனா, மெக் லேனிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

அதேபோல ஒருநாள் தரவரிசையில் 7-ம் இடத்துக்கு மந்தனா முன்னேறியுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். இதனால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 9-வது இடத்தில் உள்ளார். 

சச்சினின் 100 சதங்களை கோலி  தாண்டுவாரா? பாண்டிங் பதில்

சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் மொத்தமாக 100 சதங்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எந்த வீரராலும் தொட முடியாது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலியும் ஓய்வு பெற்ற ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தலா 71 சதங்களை எடுத்துள்ளார். 

இந்நிலையில் விராட் கோலி  100 சதங்களை எடுப்பாரா என்கிற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் கூறியதாவது., மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால் ஆமாம் எனப் பதில் சொல்லியிருப்பேன். கோலி இன்னும் பல வருடங்கள் விளையாடப் போகிறார். இன்னும் 30 சதங்கள் எடுக்க வேண்டும் என்பது கடினமான இலக்கு. அதேசமயம் விராட் கோலியால் எதுவும் முடியாது என நான் சொல்ல மாட்டேன். நன்கு விளையாட ஆரம்பித்து விட்டால், அவர் எந்தளவுக்குப் பசியுடன் இருக்கிறார், சாதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரியும் என்றார். 

டிரா செய்த பிரக்ஞானந்தா:  கைதட்டி பாராட்டிய கார்ல்சன்

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 

முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா - இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார். முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இருந்தார்கள்.2-வது நாளன்று அனைவரும் எதிர்பார்த்த கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. கடைசி வரை கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு இறுதியில் கைத்தட்டிப் பாராட்டு தெரிவித்தார் கார்ல்சன். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. 

ஏலத்தில் யாரும் சீந்தாத தெ.ஆ.  டி20 உலகக் கோப்பை கேப்டன்

2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார். தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஏலத்தில் பவுமாவின் அடிப்படை விலையாக ரூ. 38.25 லட்சமும் எல்கரின் அடிப்படை விலையாக ரூ. 7.87 லட்சமும் இருந்தன. எனினும் எந்த அணியும் இருவரையும் சீந்தவில்லை. தென்னாப்பிரிக்கா புதிதாக ஆரம்பித்துள்ள டி20 லீக் போட்டியில் தெ.ஆ. அணியின் டி20 உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களையும் வரவழைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து