முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
EPS 2022-09-19

Source: provided

சென்னை : பாலாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப் போவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப் போவதாக அறிவித்துள்ளது. ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பல்வேறு அணை கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். 

தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக ஆந்திர முதல்வர் கூறியுள்ளார். இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர் தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். ஆகவே ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது. இந்த அரசு நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து