முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 10 கோடியில் இலாத்தூர் பெரிய ஏரி சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்: தென்காசி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 12 08

ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என்றும் தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

 தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. இது இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் மட்டுமல்ல, வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது. தி.மு.க. ஆட்சி மலர்ந்து 19 மாதங்கள் ஆகி இருக்கிறது. இந்த 19 மாத காலங்களில் பல நூறு சாதனைகளை தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.  

தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி சங்கரன்கோயில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். துரைசாமிபுரம் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனையூர் கூடலூர் - துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 

சிவகிரி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகளினுடைய கோரிக்கையை ஏற்று அவர்கள் பயன்பெறக்ககூடிய வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி 2020-ல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று இந்த மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு இந்த விழாவின் மூலமாக முதல்வர் என்ற முறையில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல், வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்,  3-ம் வகுப்பு படிக்கக் கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு முதற்கட்டமாக, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு, ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதை நாம் நிறைவேற்றியதும், என்ன சொல்லுவது என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழக  மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்து விட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. 

நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக உழைக்கிறோம். தமிழகத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.

அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை ஒன்றிய அரசு வெளியிடக்கூடிய புள்ளி விவரங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் அளவீடுகளில் தமிழகத்தில் வளர்ச்சி தெரியும். இவை அனைத்தும் தமிழகம் உயர்ந்து என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது. 

திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அத்தோடு கடமை முடிந்து விட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன். உரிய காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் அரசின் இலக்கு.  எனவே, தென்காசி மாவட்டத்தினுடைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக இந்த அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து