முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு அணி வெற்றி..!

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      விளையாட்டு
TN 2023 01 28

Source: provided

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், சவுராஷ்டிரா அணி 192 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி ரவீந்திர ஜடேஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை சாய்த்தார்.

266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 68.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

________________

பத்திரிக்கையாளின் கேள்வியும்... வாஷிங்டன் சுந்தரின் பதிலும்...!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி தோல்வி குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்: நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும்.இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார். 

வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்என்றார். 

________________

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா சாம்பியன் 

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் , தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த போட்டியில் முதல் சுற்றை எலினா ரைபகினா கைப்பற்றினார் . பின்னர் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார்.இதனால் 4 - 6, 6- 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

________________

சென்னை ஓபன் ஏடிபி சாம்பியன்: பிப். 12-19-இல் நடைபெறுகிறது

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டி வரும் பிப். 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்நிலை வீரராக தைபேயின் 21 வயதே ஆன சென் சியுன் சின் (115), கிரேட் பிரிட்டன் பெட்டின்ஸன் ரயான் 149, ஆஸி. ஜேம்ஸ் டக்வொர்த் 156, இத்தாலியின் லுகா நார்டி 162, பல்கேரியாவின் டிமிடர் குஸ்மனோவ் 182, ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் 193, கஜகஸ்தானின் மிகையில் குகுஷ்கின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கடந்த 2019-இல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்ஸின் கோரன்டீன் பட்டம் வென்றார். இந்திய தரப்பில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் குவாலிஃபையிங் பிரிவில் உள்ளனர். 3 வைல்ட் கார்ட், 6 குவாலிஃபையர்கள் உள்ளனர். இந்த போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியனுக்கு ரூ.14.47 லட்சம், 100 ஏடிபி புள்ளிகள், ரன்னருக்கு ரூ.8.5 லட்சம், 60 ஏடிபி புள்ளிகள் வழங்கப்படும். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புணேயில் நடைபெறும். ஆட்டங்கள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும்.

 ________________

முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. புளூம்ஃபாண்டேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 111 ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார். மில்லர் 53 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணிக்கு அருமையான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ஜேசன் ராயும் டேவிட் மலானும் 19.3 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் மலான் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. ஜேசன் ராய் 113 ரன்கள் எடுத்தாலும் இதர பேட்டர்களால் 36 ரன்களைத் தாண்ட முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து