முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி குழும விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் விவாதிக்ககோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      இந்தியா
Parlie 20221 02 02

Source: provided

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான குற்றாச்சாட்டுகளை எழுப்பி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றம் நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜாம்பியாவில் இருந்து வந்திருந்த பாராளுமன்ற குழுவை வரவேற்று கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் ஹின்டென்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதி காக்கும்படி எதிர்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைளை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இரண்டு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மாநிலங்களைவத் தலைவர் ஜக்தீப் தன்கர், முதலில் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது., கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவித்து, சந்தை மதிப்பை இழக்கும் நிறுவனங்களில் எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த பிரச்னை குறித்து விவாதிக்க நாங்கள் அளித்த ஒத்திவைப்பு நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. முக்கியமான பிரச்னைகளை எழுப்பும் போதெல்லாம் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள ஏழை மக்களின் பணங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விவாகாரம் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் முதலீடு செய்துள்ள மக்கள் தங்களின் பணங்களை இழக்கின்றனர். உண்மையை கண்டறிய பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து