முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் அவகாசம் கோரிய சி.பி.ஐ.: குட்கா முறைகேடு வழக்கு : 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Gutka 2023 01 25

Source: provided

சென்னை : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழையை திருத்தம் செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள்,   மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து   11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சி.பி.ஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.க்கு திரும்ப அளித்தது.

இந்த வழக்கு நேற்று சென்னை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், பிழை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து