முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
OPS 2022 12 29

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும்  விபத்துகளை தடுக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி  உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பட்டாசுத் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததுதான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் கால முறை ஆய்வு மேற்கொள்ளப்படாததற்குக் காரணம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக விலைமதிக்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகளோடு ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்திட வேண்டும்.

மேலும் இனி வருங்காலங்களில் காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தவும், காலிப் பணியிடங்கள் இருப்பின் அவற்றை நிரப்பவும், பட்டாசுத் தொழிற்சாலைகளில் தகுதி வாய்ந்த வேதியியலர் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து