முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக திமுக அரசு வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகளில் இரு மடங்கு மாணவர்கள், அதாவது 60-க்கும் மேலே மாணவர்கள் படிக்கின்றனர் என்றும், இதனால் வகுப்பறைகளில் மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் (Class Control) வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, ஒரு வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில், ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால், சென்ற ஆண்டு 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பலமுறை பல்வேறு காரணங்களைக் கூறி இந்த திமுக அரசு தள்ளிவைத்துள்ளது. தற்போது,ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே, இம்முறையாவது திட்டமிட்டபடி கலந்தாய்வினை நடத்திட வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் குறைந்தபட்சம் மிகை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல இயலும். ஓரளவு ஆசிரியர் காலிப் பணியிடங்களும் பணி மாறுதல் மூலம் நிரப்பிட முடியும்.

கற்பித்தலுக்கு முதன் முறையாக சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது. எனவே, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தாமல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென்று இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து