முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடல் அறுவை சிகிச்சை: ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Pope-Francis 2023 04 02

ரோம், குடல் அறுவை சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

போப் பிரான்சிஸ் (வயது 86), தள்ளாத வயதிலும், உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் சியாட்டிகா நரம்பு வலியால் அவதிப்பட்டு வருவதால் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ஓராண்டு காலத்துக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் வாடிகன் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தன்னைக் காண வந்த பொதுமக்களை சக்கர நாற்காலியில் வந்து சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கினார். 

அதையடுத்து அவர் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டியதிருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. 

இளம் வயதிலேயே போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் ஒரு நுரையீரலில் சிறிய பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போப் ஆண்டவருக்கு நடக்க உள்ள குடல் அறுவை சிகிச்சை பற்றி வாடிகன் கூறும்போது, 

போப் பிரான்சிஸ் குடலில் தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வருகிறார். அவருக்கு குடல் அடைப்பு பிரச்சினைக்காக லேப்ரோடமி மற்றும் அடிவயிற்று சுவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது என தெரிவித்துள்ளது. 

லேப்ரோடமி என்பது அடிவயிற்றைத் திறந்து செய்கிற அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை, அவரது பிரச்சினைகளை அறுவை சிகிச்சை நிபுணர் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும். போப் ஆண்டவர் பிரான்சிஸ் முந்தைய வடுவில் இருந்து உருவான குடலிறக்க பிரச்சினையால் அவதியுறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு போப் ஆண்டவர், இதே ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவரது பெருங்குடலில் 33 செ.மீ.அளவுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அப்போது அவரது பெருங்குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், குறுகலாக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அவர் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். இப்போதும் அவர் பல நாட்கள் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து