முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை : திருச்சியில் சீமான் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      தமிழகம்
Seaman 2024-02-17

Source: provided

திருச்சி : பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் தெரிவித்தார். 

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம்.

தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.

நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். 

வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார்.  காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். 

காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும் போது ஏதாவது செய்வார்கள். அதன்பின் எந்த செய்தியும் வராது.

வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது. நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது. 

வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை. 

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து