முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது

சனிக்கிழமை, 18 மே 2024      இந்தியா
AAP 2024-05-18

Source: provided

புது டெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். 

சுவாதி மாலிவால் புகார்... 

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ம் தேதி காலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்ற போது கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டி டெல்லி போலீசில் புகார் அளித்தார். மேலும் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாகவும்,   மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாகவும் சுவாதி மாலிவால் அந்த புகாரில், தெரிவித்துள்ளார்.  

தனிச்செயலாளர் புகார்...

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் பகுதிக்கு உட்பட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அந்த புகாரில், கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையில் மாலிவால் பேசினார் என்று தெரிவித்துள்ளார். முதல்வரிடம் சந்திப்பதற்கான முன்அனுமதியை பெற்று வரும்படி மாலிவாலிடம் கேட்டு கொள்ளப்பட்டது.  ஆனால், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டார்.  முதல்வரின் பாதுகாப்பு பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார் என்றும் ஒழுங்குமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

முதல்வர் வீட்டில்...

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார்.  மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.  இதில், கெஜ்ரிவாலின் வீட்டில் பிபவ் குமார் இருக்கிறார் என தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.   

சிராய்ப்பு காயங்கள்...

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கையில், சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது. இடது காலில் 3-க்கு 2 செ.மீ. அளவிலும் மற்றும் வலது கண்ணின் கீழே வலது கன்னம் பகுதியில் 2-க்கு 2 செ.மீ. அளவிலும் காயம் ஏற்பட்டு உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து