முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி. அலுவலத்தில் முன்கூட்டியே சி.பி.ஐ. சோதனை செய்திருக்க வேண்டும் - ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011      ஊழல்

 

சென்னை, பிப்.21- கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது. தேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், 80 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரை உரிமைதாரர்களாக கொண்டுள்ள கலைஞர் டி.வி.க்கு 206 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை மத்திய புலனாய்வுத் துறை செய்து இருக்கிறது.  

இது போன்ற சந்தேகம் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடைபிடிக்கப்படும் பொதுவான நடைமுறையை பின்பற்றியதன் மூலம், தலைசிறந்த கிரிமினல் திறனாளருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை வழிவகுத்து விட்டது. கலைஞர் டி.வி.யின் கலைக்கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல், ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தார் மகன் அமிர்தம், தணிக்கையாளர் சிவசுப்ரமணியன், தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன்,  மூத்த வழக்கறிஞர்கள்,  மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறுநாள் காலை 4 மணியளவில் முடிந்ததாம்.  இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கட்டடத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டனவாம்.  13.2.2011 அன்று கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

15.2.2011 அன்று, கலைஞர் டி.வி. தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.  நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு, குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, 206 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.  இது மட்டுமல்லாமல், மேலும் ஒருபடி மேலே சென்று, மத்திய புலனாய்வுத் துறைக்கோ அல்லது வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த அழைப்பினை ஏற்று தான், மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி. அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால்,  ஸ்பெக்டரம் ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய nullதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும். இவ்வாறுஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்