முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ பதிவு மூலம் கொள்ளையன் அடையாளம் தெரிந்தது

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.23 - சென்னை வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதோடு தகவல் கொடுப்பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23​ந்தேதி துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது, போலீசாரை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக்கொள்ளை கும்பலைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வடமாநில மாணவர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மாணவர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் சிக்கினர். இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபாடு கொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் வங்கிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சென்னையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாத 400​க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள போலீசார் ஒரு சில வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். 

தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது, அதில் சந்தேகத்திற்க்கிடமாக மாணவர் போன்ற தோற்றத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றிதிரிவது தெரிய வந்தது.

அந்த வாலிபருக்கும் வங்கி கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர் யார் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் வட மாநில வாலிபர்கள் பலர் கட்டிட தொழிலாளர்களாகவும், ஓட்டல் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் தங்களது சொந்த மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் யாராவது வங்கி கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பற்றி உளவு பிரிவு போலீசாரும் கணக்கெடுத்து வருகிறார்கள். தங்களது பகுதியில் வசித்து வரும் வட மாநில வாலிபர்களை அந்தந்தப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.      

இந்த நிலையில் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

கொள்ளையர்கள் பற்றி   தகவல் கொடுப்பேருக்கு பரிசு வழங்கப்படும் என்று ,நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர  காவல்துறை ஆணையர்   திரிபாதி அறிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடிக்க 9தனிப்படைபோலீசார் வெளிமாநிலம் சென்றுள்ளதாக ஆணையர் திரிபாதி கூறியுள்ளார்.

கண்காணிப்பு கேமிரா இல்லாத வங்கிகளில் உடனடியாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது பற்றி கமிஷனர் திரிபாதி தெரிவித்ததாவது:-பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் வங்கியில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பின்வரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலை பெற்றுக்கொள்வார். குற்றவாளிகளை குறித்த சரியான தகவல் அளிக்கும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானமாக வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விபரம் இரகசியமாக வைக்கப்படும்.தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் குற்றவாளிகளின் நிழற்படங்களை தொடர்ந்து வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொலைபேசி எண்கள்

98408 -14100, 99520 -91100

கொள்ளையர்கள் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து நேரடி ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா வசதிகளை உடனடியாக ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாதாரண உடையிலும், சீருடையிலும் வங்கிகளில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!