முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை தி.மு.க. வேட்பாளர் திடீர் கைது!

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி, மார்ச்.24 - புதுவை மாநிலத்தில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.ரமேஷ் என்ற செந்திலை போலீசார் திடீரென கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். புதுவை ஓட்டலில் ஓய்வெடுக்க வந்த கருணாநிதிக்கு வேட்பாளர் என்ற முறையில் சால்வை அணிவித்து வாழ்த்து பெற வந்த நிலையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. 

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றுள்ள நிலையில் தி.மு.க. போட்டியிடும் 10 தொகுதிகளும், அங்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்களும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தட்டாஞ்சாவடி என்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஏ.கே.ரமேஷ் என்ற செந்தில் அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் புதுவைக்குள் நுழைய போலீஸ் தடை விதித்துள்ளது. 

சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த 14 ரவுடிகளை புதுவைக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று புதுவை போலீஸ் கண்காணிப்பாளர்கள் சிவதாசன், நந்தகோபால் ஆகியோர் மாவட்ட கலெக்டர் ராகேஷ்சந்திராவுக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று ஊருக்குள் நுழைய 14 ரவுடிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார் கலெக்டர் ராகேஷ்சந்திரா. 

இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க காரில் திருவாரூர் சென்றார். செல்லும் வழியில் புதுவை வந்து அண்ணாமலை ஓட்டலில் தங்கி காலை உணவு முடித்து சற்று ஓய்வெடுத்து விட்டு செல்வதற்கு ஓட்டலுக்கு வந்தார். அப்போது புதுவை தி.மு.க. பிரமுகர்கள் ஜானகிராமன், சிவா உட்பட புதிதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களும் வந்திருந்தனர். தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.ரமேஷ் என்ற செந்திலும் கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற வந்திருந்தார். இதை மோப்பம் பிடித்த புதுவை போலீஸ் ரமேஷ் என்ற செந்திலை சுற்றி வளைத்தனர். இந்த விஷயம் ஓட்டலில் தங்கி இருந்த கருணாநிதிக்கு தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த கருணாநிதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமனிடம் ஏன்யா! இப்படிப்பட்டவரை வேட்பாளராக சிபாரிசு செய்தாய்? என்று கூறினாராம். 

உடனடியாக ரமேஷ் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிதாக அரி.இளங்கோவை அறிவிக்க சொல்லிவிட்டு அவசரமாக ஓட்டலில் இருந்து வெளியேறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஏ.கே.ரமேஷ் ஓட்டலின் பின்புற வழியாக தப்ப முயன்றார். ஏற்கனவே ஓட்டலை சுற்றி வளைத்திருந்த போலீஸ் ரமேஷை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றது. 

இது அங்கிருந்த தி.மு.க.வினரை மட்டுமல்லாது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட ரமேஷ் என்ற செந்தில் புதுவை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்