முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் பூங்காவில் கோடை வெய்யிலிலும் சொர்க்கமாகும்

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 11 - வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மிக அதிக அளவில் பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். அங்குள்ள பசுமையான சூழல் கோடை வெய்யிலையே சொர்க்கமாக்கும் அளவிற்கு இதமானதாக இருப்பதால் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.  இதுப் பற்றிய விவரம் வருமாறு:-

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், சுட்டெரிக்கும் வெய்யிலால் தகித்துக்கொண்டிருக்கிறது. வெப்பத்தைக் கக்கியபடி வீசும் அனல் காற்றாலும், சுட்டெரிக்கும் வெய்யிலாலும் மக்கள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் கத்தரியும், அக்னி நட்சத்திரமும் நம்மை மிரட்ட வரப்போகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் துன்பம் பட நேரிடும். மக்கள் இப்போதே இந்த வெய்யில் கொடுமையிலிருந்து விடுபட கடற்கரை, பூங்கா, போன்ற இடங்களை தேடிச் செல்கின்றனர். அண்மைக்காலமாக வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். 

கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் 7 லட்சத்து 11 ஆயிரத்து 589 என்ற நிலையிலிருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 20 லட்சத்து 2 ஆயிரத்து 545 என்று உயர்ந்திருக்கிறது. உயிரியல் பூங்கா நிர்வாகமும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை அளித்து வருகிறது. மேலும் அங்குள்ள வனவிலங்குகளுக்கும் புத்தாக்கப்பயிற்சிகளை அளித்து வருவதால் அவைகளும், உற்சாகத்துடன் காணப்படுகின்றன. இதனால் பார்வையாளர்கள் பெரிதும் கவரப்படுகின்றனர்.

சிங்கவால் குரங்கு ஒருங்கிணைந்த இனப்பெருக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் செல்லாத இரண்டு புதிய மறைவிட இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் இனப்பெருக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் பூங்காவில் பிறந்த இளம் வரவுகளின் பட்டியல் கீழ்வருமாறு:

நீலகிரி கருங்குரங்கு - 1, சிங்கவால் குரங்கு -3, காட்டுமாடு -3, சிங்கம் -4, வெள்ளைப்புலி -2, நைல் நீர் யானை -1, முள்ளம் பன்றி -4, மர நாய் -4, புருவ கொம்பு மான் -1,  காட்டாடு -1, வராக மான் -3, கட மான் -2, தீக்கோழி -2, செந்நிறக் காட்டுக்கோழி -2, மயில் -2, வெள்ளை மயில் -2, செந்தலைக் கிளி -2, வக்கா -18, சிறுகொக்கு -10, இந்திய மலைபாம்பு  -34, மற்றும் கட்ட உடல் மலைப்பாம்பு -15.  

விலங்குகளை கோடைக்காலங்களில் அதிக வெப்பத்திலிருந்து காப்பாற்றுவது இப்பூங்காவின் முக்கியமானதெரு செயலாகும். 

மானின இருப்பிடங்களில் பனை ஓலையால் வேயப்பட்ட புதிய கொட்டகைகள். பூங்காவிலுள்ள 7யானைகளுக்கு தினந்தோறும் பூங்குளியல் மற்றும் சேற்றுக் குளியல்.

தீக்கோழி ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பறவைப் பகுதிகள் மற்றும் உட்சென்று காணும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் தானியங்கி நீர்தெளிப்பான். 

ஊர்வன இல்லத்தில் பாம்புகள் தங்களின் உடல் வெப்பநிலையை செய்யும் வகையில் இரண்டு மற்றும் மூன்றடுக்குகளில் பானை பதித்த மண்புற்றுகள்.

குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளின் உடல் வெப்பநிலையை தனிக்கும் பொருட்டு சிறப்பு உணவுகள். 

உட்சென்று காணும் பறவைகள் கூடம், தீக்கோழி, வெள்ளைப்புலி இருப்பிட உச்சியில் சூரிய ஒளி வெப்பத்தை தடை செய்யும் வகையில் நிழல் வலைகள். 

நவீன உயிரியல் பூங்காவின் நோக்கமானது வனவிலங்குகளை பூங்காக்களில் இனப்பெருக்கம் செய்து பாது காப்பதாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதன்முதலாக பூங்காவில் பிறந்த இந்திய மலைப்பாம்பு குட்டிகள் அதன்இயற்கை வாழிடமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உரிய வழிமுறைகளின் படிவிடப்பட்டுள்ளன.

விலங்குகளின் குணவியல்புகள் மாறாமலிருக்க அவற்றுக்கு இயற்கை குணங்களை வலிவூட்டும் சிறுகரடி, வெள்ளைப்புலி, சிங்கவால் குரங்கு மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு தரப்படுகின்றன. கரடிகள் சொட்டும் தேனை சுவைப்பதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் உபகரணங்களும் விலங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பூங்காவில் பார்வையாளர்கள் அதிகம் ரசிக்கும் இடங்களில் மான்கள் உலாவிடமும் ஒன்று. மான்கள் உலாவிடத்தில் உள்ள அரைவட்ட தண்ணீர் தடுப்பணைகளில் பழ வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது அங்குள்ள குளம் அதிக மழை நீரை சேகரிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டு தானியங்கி நீர் தெளிப்பான் மூலம் அவை வளர்க்கப்படுகின்றன.

வனங்களில் தாயைப்பிரிந்து வரும் யானை தாயை விட்டு பிரியும் குட்டிகளை அதன் தாயுடன் சேர்க்க முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் அக்குட்டிகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கை வளர்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் யானைக்குட்டிகளுக்கு பிற யானைகளுடன் பார்வையில் தொடர்பு கொள்ளல், விளையாட்டு சாதனங்கள், உணவூட்டும் வழிமுறைகள் மற்றும் கால்நடை விலங்கின மருத்துவம் ஆகியவற்றால் மிகவும் நன்முறையில் பராமரிக்கப்படுகின்றன. இவ்வருட வரவான முரளி மற்றும் அசோகன் ஆகிய யானைக் குட்டிகளுடன் 6 யானைக் குட்டிகள் பல்வேறு நிலைகளில் இங்கு வந்து மறுவாழ்வு பெற்று வளர்கின்றன.

இப்பூங்கா பொது மக்களிடம் விலங்குகளின் மேல் பற்று, பாசம், அன்பு இவற்றை உருவாக்கும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை இத்திட்டத்தின் கீழ் 113 விலங்குகள் 92 நபர்களால் ரூபாய் 38.7 லட்சம் பெறப்பட்டுள்ளது.

பூங்காவிலுள்ள தாவர உண்ணிகளுக்கு புதிதான பசும்புல் கொடுக்க கோ 3, கோ4, பாராகிராஸ் கரும்பு, சோளம், வாழை ஆகியவை நடப்ப்டடு தினமும் 2000 கிலோகிராம் புதிதான பசும்புல் பெறப்படுகிறது.

பூங்காவிற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க புதிய 100 கே.வி. டீசல் மின்னாக்கி மற்றும் அதன் உபகரணங்களுடன் தானாகவே இயங்கும் மாற்றிகள் பொருத்தப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பூங்கா நுழைவு வாயில் மேம்பாட்டு பணிக்காக அரசின் சுற்றுலாத்துறையில் வழங்கப்பட்ட 3.25 கோடி மேம்பாட்டு பணிக்காக செலவிடப்பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அளவில் இவ்வளவு சிற்பபான அம்சங்கள் கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மக்களுக்கு தெரியாத வண்ணம் இதுவரை அமைந்திருந்தது. அதனால் மக்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து மக்களின் பார்வைக்கும் அடையாள சின்னமாகவும் திகழ்வதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் முகப்புத்தோற்ற பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முகப்புபணிகளில் செய்யப்பட்ட முக்கிய அம்சங்களாவன.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனால் துவக்கி வைக்கப்பட்ட குகையுடன் கூடிய மலை அமைப்பு கொண்ட நுழைவாயிலுக்கு ஏற்றவாறு குறைந்த உயரத்தில் அரைவட்ட வடித்தில் 20 அதி நவீன தனித்தனி நுழைவுச்சீட்டு வழங்கும் இயந்திரங்களுடன் 2 நுழைவுச்சீட்டு மையங்கள் கருங்கல் மற்றும் பளிங்கு கற்களினால் ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கலையரங்கம், செயல் விளக்க அறை, பூங்கா நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம் ஆகியவற்றில் ஓடுகள் பதிக்கப்பட்டு சாலைகள் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு கோடை வெய்யில் கூட சொர்க்கமாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்