முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் அவுட்டானதும் எங்களது வெற்றி உறுதியானது - கங்குலி

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 23 - சேவாக்கை அவுட்டாக்கியவுடன் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பிவிட்டது என்று புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு தெரிவித்தார். 5-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகளாக திகழ்ந்ததால் இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. துவக்க ஜோடியில் உத்தப்பா சொற்ப ரன்களில் அவுட்டானாலும் பின்னர் களமிறங்கிய சவுரவ் கங்குலி, ஜெஸ்ஸி ரைடருடன் சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் புனே அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தபோதுதான் கங்குலி வீழ்ந்தார். அடுத்து ரைடருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடியும் அதிரடி ரன் குவித்ததால் ஆட்ட நேர முடிவில் புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. ரைடர் 86 ரன்களையும், கங்குலி 41 ரன்களையும், ஸ்மித் 13 பந்துகளில் 34 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் மோர்கெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரும் இலக்கை சேஸ் செய்த டெல்லி அணியில் ஜெயவர்த்தனா 7 ரன்களுடன்  ஏமாற்றம் அளித்தாலும் அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் மற்றும் சேவாக் அதிரடியாக ரன்களை குவித்தனர். இந்நிலையில் 10 வது ஓவரை வீசிய புனே கேப்டன் கங்குலி முதல் பந்திலேயே பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து ஆல்ரவுண்டர் பதான் விக்கெட்டையும் கங்குலியே வீழ்த்தினார். இருப்பினும் அதிரடியாக விளையாடிவந்த சேவாக் 57 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே முரளி கார்த்திக் பந்தில் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். அடுத்தடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதையடுத்து டெல்லி அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. ஆல்ரவுண்டராக ஜொலித்த புனே அணி கேப்டன் சவுரவ் கங்குலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த கங்குலி, சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்தியதே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்றார். மேலும் கெவின் பீட்டர்சனை அவுட்டாக்கிய பிறகு நீண்ட தூரம் ஓடி அதனை கொண்டாடியது குறித்து தெரிவித்த கங்குலி, பீட்டர்சன் விக்கெட் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான விக்கெட். அந்த விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார். அவர் மேலும் கூறுகையில் எங்களது அணியின் வீரர் இளம் ஸ்டீவன் ஸ்மித் 13 பந்துகளில் 34 ரன்களை குவித்ததும், ஜெஸ்ஸி ரைடர் 86 ரன்களை சேர்த்ததும்  அணியின் வெற்றிக்கு வித்திட்டது என்றார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்