முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யும் இடம் பெறும்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 27 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் இம்மாத இறுதியில் தனிக்கோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட இருக்கும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின்  கலைஞர் டி.வி.யும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு  செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு   செய்ததில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு  தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதை அடுத்து சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையை அடுத்து அந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர்  ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள்  கைது செய்து  கோர்ட்டில்  ஆஜர் படுத்தினர். இதை அடுத்து ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு  மிகுந்த திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் வருகிற 31-ம் தேதி டெல்லியில் தனிக்கோர்ட்டில்  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய உதவியாளர்கள்  ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த்  பெஹூரா, தொழில் அதிபர்  ஷாகீத் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் அடைந்த ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லஸ்  நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சி.பி.ஐ. தனது ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்  செய்யாது என்றும் அதற்கு பதிலாக டெல்லி  தனிக்கோர்ட்டில் தாக்கல்  செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யின் பெயரும் இடம் பெறும் என்றும் சி.பி.ஐ.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெறப்பட்ட  பணத்தில் ரூ.214 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது .  ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

என்றாலும் இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சரத்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இந்த குற்றப்பத்திரிகையில்  தி.மு.க. எம்.பி.யும்  கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி  பெயர்  சேர்க்க இதுவரை சி.பி.ஐ. எந்த  முடிவும் எடுத்ததாக தெரியவில்லை  ஆனால்  இந்த விஷயம் தொடர்பான சட்ட ஆலோசனை கிடைத்த பிறகே சி.பி.ஐ. இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது முதலாவது குற்றப்பத்திரிகையை  இம்மாதம் 31-ம் தேதி கோர்ட்டில் தாக்கல்  செய்ய எல்லா விதத்திலும் தயாராகி விட்டது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் இந்த குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்ய சி.பி.ஐ.தயாராக உள்ளது. அதன்படி இம்மாதம் 31 ம்  தேதி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை  என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டில் நடந்த கிரிமினல் சதி திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணையின் போக்கை பொறுத்தும் வழக்கில் சேர்க்கப்பட உள்ள குற்றவாளிகளை பொறுத்தும் அடுத்து தாக்கல்  செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை முடிவு  செய்யப்படும் என்றும் சி.பி. ஐ. வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony