முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி தேர்தலுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - மாநகராட்சி தேர்தலுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் கடந்த 17.10.2011 அன்று தேர்தல் நடந்தது.   இந்த தேர்தலின்போது, வன்முறை, தேர்தல் முறைகேடு, வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் ஆகிய சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன், தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி, வக்கீல் நீலகண்டன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை மாநகராட்சியில் 18 வார்டுகள் மற்றும் 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் கூறி இருந்தார். சென்னை மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என வக்கீல் நீலகண்டன் தனது மனுவில் கூறி இருந்தார்.   இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கு ஆரம்ப கட்டத்தில் விசாரணைக்கு வந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்க தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்டுப்படவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சி, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் என்.ஆர். சந்திரன், முத்துக்குமாரசுவாமி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் அரசு வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

இரு தரப்பு வாதங்கள் முடிந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:​ மாநகராட்சி தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் எதையும் மனுதாரர்கள் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக இந்த நீதிமன்றம் 14.10.2011 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநகராட்சி முறையாக பின்பற்றியுள்ளது. எனவே இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்