முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாமை ஜனாதிபதியாக்க, இணைய தளத்தில் ஆதரவு கோருகிறார் மம்தா

திங்கட்கிழமை, 18 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜுன் - 18 - திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இணையதளம் மூலம் தீவிரமாக ஆதரவு கோரி வருகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் இவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்காகத்தான் தான் குரல் கொடுத்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அப்துல்கலாம்தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று விரும்புவதாகவும், திரிணாமுல் தன்னிச்சையாக அவரது பெயரை கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் மக்களின் உறுதிப்பாடு மிகவும் வலுவானது. இதை உணர்ந்து மற்றவர்களும் கலாமுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கலாம் ஒரு ஏவுகணை மனிதர் மட்டுமல்ல, அவர் இந்தியாவின் மைந்தர். அவர் இந்தியாவின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு ஒரு உதாரண புருஷராகவும் அவர் இருக்கிறார். மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் அனைவராலும் மதிக்கப்படும் தலைவாக  விளங்கி வருகிறார். கலாம் ஒரு மிகச் சிறந்த அறிவாளி. நேர்மையாக பாரபட்சமின்றி நடந்துகொள்ளக்கூடியவர். நமது குடிமக்கள் அனைவரும் கலாம் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று விரும்புகின்றனர் என்றும் மம்தா அந்த இணையதள தகவலில் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து மம்தா பானர்ஜி, அப்துல்கலாமை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தவுடன் முலாயம் திடீர் பல்டி அடித்து பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தார். இதனால் மம்தா பானர்ஜி தனித்து விடப்பட்டுள்ளார். இருந்தாலும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்று மம்தா கூறிவருகிறார். அத்துடன் விளையாட்டு இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது என்றும் மம்தா தெரிவித்துள்ளார். குடியரசு தலைவராக அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு தலைவர் அப்துல்கலாம்தான். எனவே அவரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை என்றும் மம்தா சுட்டிக்காட்டுயுள்ளார். எவரது மனதில் அச்சம் இல்லையோ அவரது தலைமை உயர் பதவிக்கு பொருத்தமானது என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்