முக்கிய செய்திகள்

மதுரையில் 3 ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
25jaya12 0

 

மதுரை,ஏப்.1 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரையில் வரும் 3 ம் தேதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அ.தி.மு.க, தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்களும், அவர்களுக்கு ஆதரவாக திரைப்பட நட்சத்திரங்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே கடந்த 18 ம் தேதி முதல் மதுரையில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவதாக இருந்தது. பின்னர் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்த வேண்டியதிருந்ததால் பிரச்சாரப் பயணம் தொடங்குவது சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 24 ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வேன் மூலம் சென்று தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாக மதுரையில் வரும் 2 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில், குளச்சல், நெல்லை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 

அன்றிரவு நெல்லையில் தங்கும் அவர், மறுநாள் 3 ம் தேதி நெல்லையில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி சென்று பிரச்சாரம் செய்கிறார். 

தொடர்ந்து அங்கிருந்து சிவகாசியிலும், தூத்துக்குடியிலும் பிரச்சாரம் செய்யும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தென் மாவட்டங்களின் முக்கிய நகரமாக விளங்கி வரும் மதுரைக்கு வருகிறார். மதுரையில் அன்று மாலை தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் அவர், அழகர்கோவில் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் வழியாக தேவர் சிலை வந்தடைகிறார். பின்னர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக பாத்திமாக கல்லூரி, குரு தியேட்டர் சென்று காளவாசல் சந்திப்பை அடைகிறார். அங்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார். 

பின்னர் அங்கிருந்து புது ஜெயில் ரோடு வழியாக சிம்மக்கல், அண்ணா சிலை, கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாக சென்று பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி வழி நெடுகிலும் அவருக்கு உற்சார வரவேற்பு அளிக்கவும், அ.தி.மு.க. தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: