முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் செயல்பாடுகளை முன்பே சினிமாவில் எடுத்துரைத்த எம்.ஜி.ஆர்.

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.1 - தமிழக மக்களிடம் காசு கொடுத்து ஏமாற்றி ஓட்டுப் பெறும் தி.மு.க.வின் இன்றைய செயல்பாடுகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் எடுத்துரைத்தார். 

தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பலரும் பல்வேறு கமெண்டுகள் அடிப்பது வழக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கமெண்ட் பிரபல்யமாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும். நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வரும் கமெண்ட். ..

எம்.ஜி.ஆர். நடித்து 1969 ம் ஆண்டில் வெளியான படம் நம்நாடு. அப்படத்தில் எம்.ஜி.ஆரை அவரது அண்ணன் வீட்டை விட்டு விரட்டி விடுவார். பூங்காவில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை தங்களது சேரியில் வந்து தங்குமாறு ஜெயலலிதா அழைத்துச் செல்வார். சேரியில் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளியில் சப்தம் கேட்கும். அந்த சப்தத்தை கேட்டு எம்.ஜி.ஆர், என்ன சப்தம் என அருகில் உள்ளோரிடம் கேட்பார். உடனிருந்தவர்களுடன் வெளியில் சென்று பார்த்த போது மனைவியை கணவன் அடித்துக் கொண்டிருப்பார். அப்போது எம்.ஜி.ஆர், என்னய்யா, மாட்டை அடிப்பது போன்று பெண்ணை அடிக்கிறார். பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே என சுற்றி இருந்தவர்களிடம் கோபப்பட்டு மனைவியை அடித்த கணவனை தள்ளி விடுவார். 

அப்போது அந்த கணவனிடம் ஏன்யா, பெண்ணை மாடு போல அடிக்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்பார். அதற்கு அந்த ஆள் தேர்தல் வருதுங்களா. காசு கொடுக்கிறவர்களுக்கு ஓட்டுப் போட சொல்றேன். அதுக்கு அவ, கேட்க மாட்டேங்கிறா என்பார். அதற்கு எம்.ஜி.ஆர் அந்த பெண்ணை பார்த்து நீ என்னம்மா சொல்றே எனக் கேட்பார். அந்தப் பெண் நல்லவங்களுக்கா பார்த்து ஓட்டுப் போடனும் சொல்றேன். அதை அவர் ஏற்க மறுத்து என்னை அடிக்கிறார் என்பார். அவள் கணவரைப் பார்த்து எம்.ஜி.ஆர். அந்தம்மா சொல்றது நியாயம்தானே. சரி, ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்க என்பார். அதற்கு அந்த பெண்ணின் கணவர், 5 ம் கொடுப்பாங்க, 10 ம் கொடுப்பாங்க என்பார். அவரிடம் எம்.ஜி.ஆர். அந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும் என்பார். அந்த ஆள் ஒரு நாளைக்கோ, 2 நாளைக்கோ வரும் என்பார். அதற்கு எம்.ஜி.ஆர். அப்புறம் என்ன செய்வீங்க. நல்லவங்களாப் பார்த்து,  பசியை தீர்க்கிறவங்களாப் பார்த்து ஓட்டுப் போடுங்க, உங்கம்மாவும் பொம்பளை தானே. எதுக்கு உன் மனைவியை அடிக்கிறாய் என்று அந்த பெண்ணின் கணவருக்கு புத்தி வருவது போன்று எம்.ஜி.ஆர் எடுத்துக் கூறுவார். இந்த வசனங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு உள்ளனர். நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வினர் மக்களிடம் காசைக் கொடுத்து ஏமாற்றி எப்படியும் அவர்களது ஓட்டுக்களை பெற்று வெற்றியடைய வேண்டும் என பகல் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் மக்கள் மேற்கண்ட வசனங்களை பேசிக் கொண்டே தி.மு.க.வினர் கொடுப்பது அவர்கள் உழைத்து சம்பாதித்ததா? நமது வரிப்பணத்தில் கொள்ளையடித்தது தானே. பணத்தை வாங்கிக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடுவோம் என பெண்கள் தெருக்குழாய்களில் பேசிக் கொள்கின்றனர். தி.மு.க.வினரின் இந்த தில்லுமுல்லு வேலைகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் தனது சினிமா மூலம் தெரிவித்துள்ளது, கருணாநிதியை பற்றி எம்.ஜி.ஆருக்கு முன்பே தெரிந்து விட்டது போலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்