முக்கிய செய்திகள்

ஆ.ராசா மீது நாளை சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Raj 2

புதுடெல்லி, ஏப்.1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறது. இந்த குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 

மத்திய தொலைதூர தகவல் துறையாக தயாநிதிமாறன் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் சில விதிமுறைகளை மாற்றினார். அவருக்கு பின்னால் மத்திய தொலைதூரதகவல் துறை அமைச்சர் பதவியை ஏற்ற தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, அந்த விதிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தி முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தார். அதுவும் அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டதோடு, வெறும் பெயர் அளவில் இருக்கும் சில தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கும் ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு ரூ. 3 ஆயிரம் கோடி வரை ஆ.ராசா,லஞ்சம் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர், தனது மனைவி பெயரில் துபாய் போன்ற அரபு நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளிலும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மூலம் முதலீடும் செய்துள்ளார். 

இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரித்து கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கையை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டது. இந்த கிடுக்கிப்பிடியால் சி.பி.யை. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஆ.ராசாவின் வீடுகள், பினாமி பெயரில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் முதலில் சோதனை நடத்தியது. அதனையடுத்து ராசாவை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தது. விசாரணையில் ஆ.ராசா மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவரை கைது செய்தது. பின்னர் அவரிடம் 14 நாட்கள் விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. மேலும் பிரபல அரசியல் பெண் தரகர் நீராராடியா, ராசாவின் பினாமி சாதிக்பாட்ஷா( இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது) ராசாவின் தனிச்செயலாலர் சந்தோலியா, தொலைதூர தகவல்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா, ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ஸ்வான் கம்பெனி நிர்வாக அதிகாரி பால்வா, முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மனைவி கனிமொழி,(இவர்கள் இருவரும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாக உள்ளனர்) பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, அகர்வாலு ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர் கனிமொழி, தயாளு அம்மாளை தவிர அனைவரையும் கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ.விசாரித்து வருகிறது. கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் ஆசிப் பல்வாவுக்கும் அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை நீண்டு கொண்டே போவதால் கடந்த 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அறிக்கையை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி சுப்ரீம்கோட்டில் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைகேடு, லஞ்சம், மோசடி, போலி தஸ்தாவேஜூகள் தயாரித்தல் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துதல் பிரதமரின் அறிவுரையை மீறியது, மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து இருப்பதாகவும், இது நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: